ரயிலில் பயணிக்கும் பெண்களுக்கு 'நிர்பயா அட்டை'

கோப்புக் காட்சிரயிலில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்புக்காக அவர்களுக்கு 'நிர்பயா அட்டை' என்ற பெயரில் ரயில்வே போலீஸ் உதவி எண்கள் அடங்கிய அட்டைகளை வழங்கி வருகிறது வடக்கு-மத்திய ரயில்வே நிர்வாகம்.
கடந்த 2012-ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். படுகாயமடைந்த அந்த மாணவி சிகிச்சை பலனளிக்காமல் பலியானார். உயிரிழந்த அந்தப் பெண் நிர்பயா என்றே அழைக்கப்படுகிறார்.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்புச் சட்டத்திற்கும் நிர்பயா சட்டம் என்று பெயரிட்டப்பட்டது. இந்த வரிசையில் வடக்கு-மத்திய ரயில்வே நிர்வாகம், ரயில் பயணத்தின் போது பெண்கள் பாலியல் சீண்டலுக்கு ஆளானால் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொள்ளும் வகையில் ரயில்வே காவல் கட்டுப்பாட்டு அறை எண்கள் அடங்கிய 'நிர்பயா அட்டை' வழங்கி வருகிறது. ஏ.டி.எம். அட்டை அளவில் இந்த அட்டை இருக்கிறது.
இந்த அட்டையில் உள்ள எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும், ரயில் ஓடிக் கொண்டிருக்கும் போதும் புகார் அளிக்கலாம் அவ்வாறு அளிக்கும் போது அடுத்த ரயில் நிறுத்தத்தில் காவல் உதவி கிடைக்கும் என்றும் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Comments