இந்தியாவின் செவ்வாய்த் திட்டம்:



விண்வெளி ஆய்வு என்பதே பனிப்போர் காலத்தில் அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையே நடைபெற்ற போட்டியின் வெளிப்பாடாகவே ஆரம்பித்தது. இப்போது கூட தேசத்தின் வல்லமையை, அதன் தொழில்நுட்பத் திறனை எடுத்துக் காட்டும் விடயமாகவே விண்வெளி ஆய்வு பார்க்கப்படுகிறது.
செவ்வாய்க் கிரகத்துக்கு செல்ல ஜப்பானும், சீனாவும் செய்த முயற்சிகள் தோல்வியடைந்துள்ள நிலையில், இந்தியாவின் இந்த முயற்சி ஆசியாவில் நடைபெறும் புவிசார் அரசியல் போட்டியின் வெளிப்பாடாகவே சில ஆய்வாளர்களால் பார்க்கப்படுகிறது.
சீனா சில ஆண்டுகளாக மனிதர்களை வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பி வருகிறது. சக்தி வாய்ந்த ராக்கெட்டுக்களை வைத்துள்ளது. சுருக்கமாகச் சொன்னால் இந்தியாவை விட பல ஆண்டுகள் முன்னேறிய நிலையில் சீனா இருக்கிறது.
சீனாவுடன் போட்டியா?
சீனாவுடன் போட்டிபோடும் நோக்கில் இந்தியா இந்த திட்டத்தை மேற்கொள்ளவில்லை என்கிறார் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தலைவர் கே ராதகிருஷ்ணன். "நாங்கள் சீனாவுடனோ மற்ற எந்த ஒரு நாட்டுடனோ போட்டிபோடவில்லை. நாங்கள் மேலும் மேலும் சிறப்பாக செய்ய வேண்டும் – குறைந்த செலவில் அதிக பயன்களைத் தர வேண்டும் என்று விரும்புகிறோம்" என்றார் அவர்.
ஆனால் விண்வெளி ஆய்வு என்பதே மிகவும் செலவு பிடிக்கும் விடயம் என்ற கருத்தும் நிலவுகிறது. எனவேதான் மேற்கத்திய ஊடகங்கள் பல இந்தியாவின் வறுமையையும் விண்வெளித் திட்டத்தையும் தொடர்புபடுத்தி இது போன்ற திட்டங்கள் தேவையா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்திய அரசு இந்த ஆண்டு 5600 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இதில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட தொகை தொலைத்தொடர்பு செயற்கைக் கோள்கள், நுண்ணுணர்வு செயற்கைக் கோள்கள், ராக்கெட்டுகள் மற்றும் அவை தொடர்பான கட்டமைப்புகள் ஆராய்ச்சிகள் போன்றவற்றுக்கே பயன்படுத்தப்படுகின்றன. மிகக் குறைந்த தொகையே வேறு கிரகங்களுக்கு செல்லும் ஆய்வுகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன.
இதற்கிடையே, இத்தகைய உடனடியான பொருளாதாரப் பயன்கள் கிடைக்காவிட்டாலும் இந்த ஆய்வுகள் மிகவும் அவசியமானவை என்கிறார் டாக்டர் அண்ணாதுரை. தொழில் புரட்சியின் பயன்கள் இந்தியாவுக்கு கிடைக்காததன் காரணமாகவே இந்தியா வறுமை நாடானது என்று கூறும் அவர், இந்திய விண்வெளி திட்டம் மூலமாக புயல், சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகளின் தாக்கங்களை கணிக்க முடிவதாகவும், இயற்கை வளங்கள் இருப்பதை கண்டறிய முடிவதாகவும் கூறினார்.
"சந்திரனில் நீர் எங்கே இருக்கிறது என்று மட்டுமல்ல- பூமியில் எங்கே நீர் கிடைக்கும் என்பதையும் நாங்கள் கணித்துக் கூறுயுள்ளோம்" என்றார் அண்ணாதுரை.
அதே நேரம் செவ்வாய் திட்டம் குறித்து இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மாதவன் நாயரும் சில சந்தேகங்களை வெளியிட்டுள்ளார்.
சந்தேகங்கள்
செவ்வாய் திட்டத்தில் ஆரம்பத்தில் முடிவு செய்யப்பட்ட பல குறிக்கோள்கள் தற்போது வெகுவாக குறைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டும் மாதவன் நாயர், இந்த முயற்சி முழு பலனை அளிக்காது என்கிறார்.
"செவ்வாய் கிரகத்தை நன்கு ஆராய வேண்டுமென்றால்,அந்த கிரகத்தை சுற்றி குறைந்த தூர வட்டப் பாதையில் செல்ல வேண்டும. ஆனால் இந்த கோளோ 377 கோலோ மீட்டரில் இருந்து 80 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை கொண்ட நீள்வட்டப் பாதையில் செல்லவுள்ளது. இதனால் துல்லியமாக செவ்வாயை ஆராய முடியாது. மேலும் இந்த கலன் 15 உபகரணங்களை எடுத்துச் செல்லும் என்று முன்பு தீர்மானிக்கப்பட்டது. ஆனால் தற்போது வெறும் 5 உபகரணங்களே எடுத்துச் செல்லப்படுகின்றன. செவ்வாயில் மீதேன் இருக்கும் சாத்தியக் கூறுகள் குறித்தும் ஏற்கனவே ஏராளமான தரவுகள் இருக்கின்றன. புதிதாக இப்போது எதையாவது கண்டுபிடிக்கமுடியாமா என்று தெரியவில்லை" என்றார் மாதவன் நாயர்.
சந்திராயன் திட்டத்தின் போது சந்திரனுக்கு 100 கிலோ மீட்டர் தொலைவிலான வட்டப் பாதையை இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டது. பிறகு அது 200 கிலோ மீட்டராக உயர்த்தப்பட்டது. செவ்வாய் பரப்பை குறைந்த தூரத்திலும் – தூரத்தில் இருந்தும் இரு வேறு செயற்கைக் கோள் செய்யக் கூடிய ஆய்வுகளை ஒரு செயற்கைக் கோள் மூலம் செய்ய வேண்டும் என்பதாலேயே நீள் வட்டப் பாதை தேர்ந்தெடுக்கப்பட்டதா இஸ்ரோ கூறுகிறது. உபகரணங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால், ஆய்வுக்கு பங்கம் வராது என்கிறார் டாக்டர் அண்ணாதுரை.

Comments