சிந்து சமவெளி நாகரிகம் அழிவுக்கு வன்முறை, நோய் காரணம்?

சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், சிந்து சமவெளி, ஹாரப்பா நாகரிகம் அழிவுக்கு தனிப்பட்ட நபர்கள் இடையிலான வன்முறை, தொற்று நோய்கள், பருவநிலை மாறுபாடு ஆகியவை முக்கியக் காரணிகள் என புதிய ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது.
இதுகுறித்து, அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தில் உள்ள அப்பலேச்சியன் மாநில பல்கலைக்கழத்தின் மானுடவியல் துறை இணை பேராசிரியர் கவென் ராபின்ஸ் ஸ்சுக் தனது ஆய் வறிக்கையில் கூறுகையில், “இந்த நாகரிகம் நகர நாகரிகமாவதற்கு வழி கோலிய பருவநிலை, பொருளாதார, சமூக மாற்றங்களே அழிவுக்கும் வழிவகுத்தது. ஆனால் இந்த மாற்றங்கள் எப்படி மக்கள் தொகையை பாதித்தது என்பது பற்றி விரிவாகத் தெரியவரவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
சிந்து சமவெளி நாகரிகத்தின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான ஹாரப்பாவில் இறந்தவர்களை புதைக்கும் 3 இடங்களில் கிடைத்த மனித மண்டை ஓடுகளை பேராசிரியர் ராபின்ஸ் ஸ்சுக் மற்றும் சர்வதேச ஆய்வுக்குழுவினர் ஆய்வு செய்தனர்.
இதில் காயங்கள் மற்றும் தொற்று நோய் பாதிப்புகளுக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அமெரிக்க பல்கலைக்கழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிந்து சமவெளி நாகரிகம் சமூக பாகுபாடு, அதிகார மேலிடம், தங்கள் அடிப்படைத் தேவைகளை அடைவதில் கருத்து வேற்றுமை ஆகியவை இல்லாத, அமைதியான, ஒத்துழைப்புடன் கூடிய, சமத்துவ சமூகமாக வளர்ச்சியடைந்தது என்று பலராலும் கூறப்பட்டுவரும் நிலையில், இவர்களின் ஆய்வு முடிவுகள் வேறுபட்டுள்ளன.

Comments