வங்கிகளின் இயக்குநர் குழுக்களை ஆராய ரிசர்வ் வங்கி குழு நியமனம்

வங்கிகளின் இயக்குநர் குழுவின் செயல்பாடுகளை ஆராய ஒரு குழுவை ரிசர்வ் வங்கி அமைத்துள்ளது. 8 பேரடங்கிய இந்த நிபுணர் குழுவுக்கு தலைவராக பி.ஜே. நாயக் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கெனவே ஆக்ஸிஸ் வங்கியின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர்.
ரிசர்வ் வங்கி வகுத்துள்ள விதிமுறைகளை வங்கிகளின் இயக்குநர் குழுக்கள் அமல்படுத்துகின்றனவா, அவற்றின் தேவைகள் என்ன, அவற்றின் செயல்பாடுகளை ஒரே சீராக்குவதற்கு எத்தகைய நடவடிக்கை எடுக்க வேண்டும், எத்தகைய நடவடிக்கை எடுப்பதன் மூலம் இயக்குநர் குழுவின் செயல்பாடுகளை மேம்படுத்தலாம் என்பனவற்றை இக்குழு ஆராயும்.
இப்போது உள்ள வங்கிகளின் இயக்குநர் குழுக்களின் செயல்பாடு எவ்விதம் உள்ளது என்பதை ஆராய்வதோடு, புதிய உத்திகள் வகுப்பதற்கு இயக்குநர் குழுவுக்கு போதிய அவகாசம் உள்ளதா என்பதையும் ஆய்வு செய்யும். வங்கியின் வளர்ச்சிக்கு எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது, கடன் வழங்குவதில் கடைப்பிடிக்கப்பட்ட முறைகள், ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள், வழிகாட்டு நெறிகள் கடைப்பிடிக்கப்பட்டனவா என்பதையும் இக்குழு ஆராயும். ஒவ்வொரு தரப்பிலிருந்தும் போதிய அளவு உறுப்பினர்கள் குழுவில் இடம்பெற்றுள்ளனரா என்பதையும் இக்குழு பரிசீலிக்கும்.
இயக்குநர் குழு அனைத்துத் தரப்பு பிரதிநிதிகளையும் உள்ளடக்கியுள்ளதாக உள்ளதா என்பதையும், வங்கியை சுயேச்சையாக செயல்பட வைக்க அனைத்துத் துறைகளைச் சார்ந்த நிபுணர்களையும் கொண்ட அமைப்பாக விளங்குகிறதா என்பதையும் கண்டறியும். உரிமை யாளர் பிரதிநிதிகள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புக்கு இடையே நிலவும் பூசல்கள், இரு தரப்புக்கும் எழக்கூடிய மோதல் காரணங்கள் ஆகியவற்றையும் இக்குழு கண்டறியும். இத்தகைய சூழலில் வங்கியின் இயக்குநர் குழுவை மதிப்பீடு செய்வதோடு உரிய அதேசமயம் சரியான வழிகாட்டுதலையும் இக்குழு பரிந்துரைக்கும். இந்த பரிந்துரை அனைத்து வங்கிகளின் இயக்குநர் குழுவுக்கும் பொருந்தும் வகையிலும் இருக்கும்.
மேலும் இயக்குநர் குழு அளிக்கும் சம்பள பரிந்துரைகளையும் கணக்கிடும்.
இக்குழுவின் முழு நேர உறுப்பினராக செபி அமைப்பைச் சேர்ந்த எஸ். ராமன், அலகாபாத் வங்கியின் தலைவர் சுபலட்சுமி பான்ஸே, செபி-யின் முன்னாள் நிர்வாக இயக்குநர் பிரதீப் கர், மெக்கன்ஸீ நிறுவனத்தின் இயக்குநர் ஜெய்தீப் சென்குப்தா, பெய்ன் அண்ட் கம்பெனி இந்தியா லிமிடெட்டின் பங்குதாரர் ஹர்ஷ்வர்தன், ஜே சாகர் அசோசியேட்ஸின் பங்குதாரர் ஜே. சாகர், இந்திய வணிகவியல் பள்ளியின் துணைப் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Comments