வறுமைக் கோட்டிற்கு கீழுள்ளோர் கணக்கெடுப்பு - என்றால் என்ன?

நாம் முன்னர் பார்த்த வறுமை மதிப்பீடுகள் பொருளாதாரத்தின் வளர்ச்சிப் போக்கில், நாட்டின் ஒட்டுமொத்த வறுமையின் போக்கு பற்றி தெரிந்துகொள்ள மட்டுமே பயன்படுத்தப்படும். இதன் மூலம் நாட்டில் எவ்வளவு பேர் ஏழைகள் என்று மட்டும்தான் கணிக்க முடியுமே தவிர, அவர்கள் யார் யார் என்பதை துல்லியமாக குறிப்பிடமுடியாது. அப்படி நம்மை சுற்றி வறுமைக் கோட்டிற்கு கீழுள்ளவர்கள் யார் யார் என்பதை அறிய பயன்படுத்தப்படுவதுதான் பிபிஎல் கணக்கெடுப்பு.
இதன் முக்கிய நோக்கம் அரசின் உதவி, நலத்திட்டங்களின் பலன் உண்மையிலேயே ஏழ்மை நிலையில் உள்ளவர்களைச் சென்றடைய வேண்டும் என்பதுதான். அப்படி சேரும் பட்சத்தில், அரசு அவர்களுக்கான உதவிகளை அதிகமாகவும் செய்யமுடியும். முன்பு, கிராம நிர்வாக அலுவலர், வருவாய்த் துறை அதிகாரிகளே அந்தந்த பகுதிகளிலுள்ள ஏழைகளை இனங்கண்டு கூறுவார்கள். ஆனால், இந்த முறையில் தனி மனித விருப்பு வெறுப்புகள், சமூக வேற்றுமைகள் காரணமாக நலத்திட்டங்களின் பலன் ஏழ்மை நிலையில் உள்ளவர்களை விடுத்து மற்றவர்களைச் சென்றடையக்கூடும் என்பதால் மத்திய ஊரகத்துறையும் மாநில அரசுகளும் இணைந்து பல்வேறு சமூக பொருளாதார குறியீடுகளின் அடிப்படையில் இந்த பிபிஎல் கணக்கெடுப்பை நடத்தி வறுமையில் உள்ளவர்களை அடையாளம் காண்கிறார்கள்.
வறுமையில் உள்ளோரின் சூழல்கள் தொடர்ந்து மாறக்கூடும் என்பதால் இந்த கணக்கெடுப்புகள் தொடர்ந்து நடத்தப்படவேண்டும். எனவே 1997 மற்றும் 2002 இல் மீண்டும் இந்த கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டன; ஆனால் 2002 கணக்கெடுப்பின் அடிப்படைகளில் பல குறைகள் இருப்பதாகவும், இதில் உண்மையான ஏழைகள் விடுபடக்கூடிய ஆபத்துள்ளது எனவும் விமர்சிக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. பின்னர் அரசு, N.C. சக்சேனா குழுவை அமைத்து, அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தற்போது விரிவான சமூக பொருளாதார மற்றும் சாதி கணக்கெடுப்பு 2011 (Socio Economic and Caste Census 2011) நடக்கின்றது.
அரசின் நலத்திட்டங்கள் இலக்கின் (Targeted) அடிப்படையிலில்லாமல் பொதுவாக எல்லோருக்கும் ( Universal) கிடைக்க வேண்டும் என்ற கருத்தும் உள்ளது. அரசியல் அமைப்பில் உள்ள அடிப்படை உரிமைகளான, எல்லோருக்கும் கல்வி, சுகாதாரம், வேலை, உணவு போன்றவை எல்லோருக்கும் கிடைக்க வேண்டியது மிகவும் அவசியம். ஆனால், மிகவும் வறுமையில் உள்ளோர், பெண்கள், குழந்தைகள், மதம் சாதி வேறுபாடுகளால் பாதிக்கப்பட்டோர் போன்றவர்களுக்கான சிறப்பு திட்டங்களுக்கு பிபிஎல் கணக்கெடுப்பு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

Comments