பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் இப்போது அமெரிக்காவுக்கு சவாலாக இருப்பது ரஷ்யாவோ அல்லது வேறு எந்த ஐரோப்பிய நாடுகளோ அல்ல.
உலகின் பெரிய அண்ணன் என தமக்கிருக்கும் அந்தஸ்துக்கு ஆபத்து வரும் என்றால் அதுவும் அந்த ஒரு நாட்டால்தான் என்பதையும் அமெரிக்கா ஏற்கனவே கணித்துவிட்டது. அது நிச்சயமாக சீனாதான்.
அமெரிக்காவின் இந்த அச்சத்தை உச்சத்துக்கு கொண்டு செல்லும் ஒரு நடவடிக்கையை கடந்த வாரம் ஆரவாரமின்றி அமைதியாகச் செய்து முடித்துவிட்டது சீனா.
அது ஹைபர்சானிக் ஏவுகணை சோதனை. ஒலியைவிட சுமார் 10 மடங்கு வேகத்தில் சென்று இலக்கைத் தாக்கக்கூடியது இந்த அதிநவீன ஏவுகணை.
இந்தியா உள்ளிட்ட நாடுகளிடமும் சிறியரக ஹைபர்சானிக் ஏவு கணைகள் உள்ளன. ரஷ்யாவுடன் இணைந்து ஹைபர்சானிக் ஏவுகணை தயாரிப்பிலும் இந்தியா ஈடுபட்டுள்ளது. ஆனால் சீனா சோதித்துள்ள ஹைபர்சானிக் நவீனமானதும் அதி வேகமானதும்கூட. இனிமேல் சீனா நினைத்தால் உலகின் எந்த மூலையில் உள்ள இடத்தையும் பெய்ஜிங்கில் இருந்தபடி ஒரு மணி நேரத்துக்குள் தாக்கமுடியும்.
இதுவரை அமெரிக்காவிடம் மட்டுமே அதிவேக ஹைபர்சானிக் ரக ஏவுகணை இருந்து வந்தது. இப்போது சீனாவின் கையிலும் ஹைபர்சானிக் ஏவுகணை உள்ளது. சீனா சோதித்துள்ள ஹைபர் சானிக் ஏவுகணை அமெரிக்காவிடம் உள்ளதைவிட கூடுதல் அபாயகர மானது. சீனாவில் இருந்து சுமார் 12 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வாஷிங்டனை அடைய இந்த ஏவுகணைக்கு 45 நிமிடங்களே போதும் என்பது அமெரிக்காவின் வயிற்றை கலக்குகிறது. இந்த ஏவுகணை சோதனையை சீனா ரகசியமாகச் செய்து முடித் தாலும் அமெரிக்காவின் கழுகுக் கண்களிடம் இருந்து தப்ப முடிய வில்லை. ஹைபர்சானிக் ஏவுகணை சோதனை மேற்கொண்டதை இதுவரை நேரடியாக சீனா ஒப்புக்கொள்ளவும் இல்லை, மறுக்கவும் இல்லை. எனினும் நவீன தொழில்நுட்பத்திலான ஆயுதங் களை சீனா தொடர்ந்து மேம்படுத்தி வருவது உண்மைதான். எனினும், இது எந்த நாட்டுக்கும் எதிரானதோ அச்சுறுத்தல் விடுப்பதற்கோ அல்ல, சுய பாதுகாப்புக்கானது என்று பட்டும்படாமலும் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தென்சீனக் கடல் பகுதியில் உள்ள தீவுகள் தொடர்பான பிரச்சினையில் ஜப்பானுக்கு ஆதரவாகவும், சீனாவுக்கு எதிராகவும் அமெரிக்கா நடந்து கொண்டது. இதற்கு சீனா அளித்துள்ள பதிலடி தான் இந்த ஹைபர்சானிக் ஏவுகணை சோதனை. சீனா நடத்திய ஹைபர்சானிக் ஏவுகணை சோதனையை முன்வைத்து அமெரிக்காவில் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி, ஆளும் ஜனநாயகக் கட்சியை உலுக்கியடுத்து வருகிறது.
``நவீன ஆயுதத் தொழில்நுட்பத்தில் சீனா நம்மைவிட முன்னேறிவிட்டது. பாதுகாப்புத் துறை ஆய்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காததும், ஆயுதத் தொழில்நுட்ப ஆய்வுக்கு போதிய நிதி ஒதுக்காததும்தான் இதற்கு முக்கியக் காரணம். அமெரிக்காவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவிட்டது” என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒபாமா நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர்.
சீனாவின் செயல் நிச்சயமாக தங்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் என்பதை புரிந்துகொண்ட அமெரிக்கா அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீவிரமாக ஆலோசிக்கத் தொடங்கியுள்ளது.
ஹைபர்சானிக் ஏவுகணையை தட்டிவிட்டால் நாசவேலையை மிகவேகமாகச் செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த ஏவுகணை வருவதை முன்னதாக கண்டறியவோ, அதனை தடுத்து நிறுத்தி அழிக்கவோ முடியவே முடியாது என்பது உலக நாடுகள் அனைத்துக்கும் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல். நாசகர ஆயுதங்கள் யார் கையில் இருந்தாலும் அவற்றால் மனித குலத்துக்கு எந்த நேரத்திலும் பேரழிவை ஏற்படும் அபாயம் இருக்கிறது. இப்போது ஹைபர்சானிக் ஏவுகணை சோதனை நடத்தி வெற்றி கண்டுள்ளதன் மூலம் சர்வதேச அளவில் மற்றொரு நவீன ஆயுதப் போட்டிக்கு வித்திட்டுள்ளது சீனா.
Comments