தேசிய நகர்ப்புற சுகாதார திட்டம்

பெங்களூரில் தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தை திங்கள்கிழமை தொடங்கிவைத்த பிறகு அங்கு அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிடும் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத். உடன் கர்நாடக முதல்வர் சித்தராமய்யா. படம்: கே.முரளி குமார்.நாடு முழுவதும் உள்ள 779 நகரங்களில் வாழும் 22.13 கோடி மக்கள் பயன்பெறும் தேசிய நகர்ப் புற சுகாதார திட்டத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் பெங்களூரில் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டத்தைத் தொடர்ந்து மத்திய அரசு தற்போது தேசிய நகர்ப்புற சுகாதாரத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் தொடக்க விழா பெங்களூரில் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட கர்நாடக அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்து மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் பேசியதாவது:
''நாட்டில் உள்ள அனைத்து மாநில தலைநகரங்கள், முக்கிய மாவட்ட தலைநகரங்கள் மற்றும் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஒவ்வொரு நகரிலும் இந்தத் திட்டத்தின் கீழ் சுகாதார மையங்கள் நிறுவப்படும். முதல்கட்டமாக 2015-ம் ஆண்டிற்குள் 779 நகரங்களில் இத்திட்டம் அமலாக்கம் செய்யப்படும். இதன்மூலம் 22 கோடியே 13 லட்சம் மக்கள் பயனடைவார்கள்.
இத்திட்டத்தின் கீழ் சமூகத்தில் மிகவும் பின் தங்கியுள்ள ஏழை எளியோர், வீடு இல்லாதவர்கள், பாலியல் தொழிலாளர்கள், ரிக் ஷா தொழிலாளர்கள், குப்பை பொறுக்குபவர்கள் உள்ளிட்ட 7.75 கோடி மக்கள் பயனடைவார்கள்.
சமூக சுகாதார மையங்கள், நகர்ப்புற அதிநவீன ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவை அமைக்கப்படும். 30 முதல் 100 படுக்கைகள் கொண்ட இந்த சுகாதார மையங்களின் மூலம் மருத்துவ சிகிச்சைகள், முதலுதவி சிகிச்சைகள், அவசர சிகிச்சைகள் ஆகியவை செய்யப்படும். இத்திட்டத்திற்கான செலவில் மத்திய அரசு 80 சதவீதமும், மாநில அரசு 20 சதவீதமும் வழங்கும் என்றார்.
கர்நாடகத்தில் இத்திட்டம் பெங்களூர், மைசூர், மங்களூர், பாகல்கோட்டை ஆகிய இடங்களில் நிறுவப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments