கருப்புப் பணத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, கிரிக்கெட் சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்கலாம் என்று உச்ச நீதிமன்றத்திடம் முத்கல் குழு கேட்டுக்கொண்டுள்ளது.
பிசிசிஐ தலைவர் சீனிவாசன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை, அவை குறித்து உச்ச நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. குறிப்பாக, பிசிசிஐ தலைவர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமையாளர் ராஜ் குந்தரா உள்ளிட்டோர் ஐபிஎல் அணிகளின் மீது பணம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டது.
இதுகுறித்து விசாரிக்க பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முகுல் முத்கல் தலைமையில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நாகேஸ்வர ராவ், அசாம் கிரிக்கெட் சங்க உறுப்பினர் நிலாய் தத்தா ஆகியோர் அடங்கிய மூவர் கமிஷனை உச்ச நீதிமன்றம் நியமித்தது.
கடந்த சில மாதங்களாக விசாரணை நடத்தி வந்த இந்தக் கமிஷன் தனது 100 பக்க விசாரணை அறிக்கையை இன்று (திங்கள்கிழமை) உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
அதில், பிசிசிஐ தலைவர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டது நிரூபணமாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட்டை தூய்மைப்படுத்த 10 அம்ச திட்டம்
தமது விசாரணை அறிக்கையுடன், கிரிக்கெட்டை தூய்மைப்படுத்த 10 அம்ச திட்டத்தையும் உச்ச நீதிமன்றத்திடம் முத்கல் கமிஷன் அளித்துள்ளது.
அதன்படி, கிரிக்கெட் சூதாட்ட ஊழல் கண்காணிப்பு பணியில் ஓய்வுபெற்ற ராணுவ, போலீஸ் அதிகாரிகளை ஈடுபடுத்தலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதில் இடம்பெற்றுள்ள மற்றொரு அம்சம், விளையாட்டுத் துறையில் விவாதத்தைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது. விளையாட்டு சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்குவது என்பதே அந்தப் பரிந்துரை.
கருப்புப் பணத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், நிழல் உலக தாதாக்களின் ஆதிக்கத்தை ஒடுக்குவதற்கும் கிரிக்கெட் சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்கலாம் என்று அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் விளையாட்டின் மூத்த வீரர்களிடம் இருந்து பெற்ற கருத்துகளின் அடிப்படையில், மேட்ச் ஃபிக்ஸிங் - ஸ்பாட் ஃபிக்ஸிங் போன்றவற்றைக் களைவதற்கும் இது வழிவகுக்கும் என முத்கல் கமிஷன் குறிப்பிட்டுள்ளது,
அதேபோல், இளம் வீரர்களிடம் சச்சின், டிராவிட், கங்குலி, லஷ்மண், கும்ப்ளே போன்ற ஓய்வுபெற்ற வீரர்களை உரையாட வைப்பது, அறிவுரைகளைக் கூறவைப்பது உள்ளிட்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதும் நல்ல பலனைத் தரும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments