பிரபல எழுத்தாளரும் திரைப்பட வசனகர்த்தாவுமான பாலகுமாரன் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று (மே 15) காலமானார். அவருக்கு வயது 71. தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்ற சிற்றூரில் பிறந்த பாலகுமாரனுக்கு, தமிழ் எழுத்துலகில் தனி இடம் உண்டு. தொடக்கத்தில் கவிதைகள் எழுதிவந்த இவர், அதன் பின் கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள் என பலவற்றையும் எழுதினார். மெர்க்குரிப் பூக்கள், கரையோர முதலைகள், பயணிகள் கவனிக்கவும், இரும்புக் குதிரைகள், சோழ சாம்ராஜ்யத்தின் புகழ் சொல்லும் கங்கை கொண்ட சோழன், உடையார் என 200க்கும் மேற்பட்ட நாவல்களும், 100க்கும் மேற்பட்ட சிறுகதைகளும் எழுதியுள்ளார். இதில் இரும்புக் குதிரைகள் நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார்.

Comments