நாட்டின் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களின் வளர்ச்சி அடிப்படையிலான தர நிர்ணயத் திட்டத்தை அரசின் ஆலோசனை அமைப்பான நிதி ஆயோக் தொடங்கியுள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கும் 2018-19 நிதியாண்டில் அமல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சென்ற ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்தார். இதன்படி, வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய இந்தியாவின் 101 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றின் மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்தப்படும். கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு, அடிப்படை வசதிகள், வேளாண்மை, நீர்வளம், ஊட்டச்சத்து, திறன் மேம்பாடு ஆகிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு மாவட்டங்களின் தரவுகள் அரசு சார்பாகத் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுப் பொதுமக்களின் பார்வைக்கு எடுத்துச் செல்லப்படும். மேலும், 101 மாவட்டங்களும் அவற்றின் மேம்பாட்டுப் புள்ளிகள் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்படும். கேரளா மற்றும் மேற்கு வங்கம் தவிர்த்து அனைத்து இந்திய மாநிலங்களும் இத்திட்டத்தில் அங்கம் வகிக்கின்றன. இம்மாநிலங்களும் விரைவில் இத்திட்டத்தின் கீழ் இணைந்துவிடும் என்று நிதி ஆயோக் தலைமைச் செயலதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் மாவட்டங்களுக்கான தரவரிசையில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விசாகப்பட்டினம் 48.13 சதவிகிதப் புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மீவட் மாவட்டம் 26.02 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் இருக்கின்றன. ராஜ்நந்த்கான், ஆஸ்மனாபாத், கடப்பா, ராமநாதபுரம், உத்தம்சிங் நகர், மகாசமந்த், கம்மம் உள்ளிட்ட மாவட்டங்களும் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன.

Comments